என்னுடைய ஆங்கில வலைப்பக்கத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும் இப்படிக்கு உங்கள் தோழன் ஷாஜஹான் சார்லஸ்

2/25/2013

ஜாவா நிரலை இயக்க என்னென்ன தேவை?

ஜாவா குறித்து அடிப்படைத் தகவல்களைக் கொஞ்சம் தெரிந்து கொண்டு விரைவில் நிரலெழுத குதித்து விடலாம்.  அதற்கு முன்னர் ஜாவா மெய்நிகர் கணினி குறித்து சிறிது தெரிந்து கொள்வோம். 

மேலான விவரங்களுக்கு விக்கீபீடியாவிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
புதியவர்களுக்கு ஒரு தகவல்: தமிழில் தொழில்நுட்ப தகவல்களைப் பெறத் தமிழிலேயே தேடுங்கள். எடுத்துகாட்டிற்கு java tamil tutorial எனத் தேடுவதற்கு பதில் ”ஜாவா கட்டுரை” போன்ற குறிப்புகளைக் கொடுத்து தேடலாம்.

ஜாவா நிரலை இயக்க என்னென்ன தேவை?

ஜாவா நிரலை எழுதுவதற்கு பெரிதாக ஒன்றும் தேவையில்லை. ஏதேனும் ஒரு உரை பதிப்பி (text editor) இருந்தால் போதுமானது.  எடுத்துகாட்டிற்கு விண்டோசில் நோட்பேடிலும் லினக்சில் ஜிஎடிட், கேஎடிட்டர்,  விஐ... போன்ற மென்கலங்களிலும் எழுதிக் கொள்ளலாம்.  அதை கணினிக்கு புரியும்படி எப்படி மாற்றுவது? (கணினிக்கு அவற்றின் மொழியான இரும மொழி தவிர வேறு மொழி தெரியாது).  உயர்நிலை மொழியிலிருந்து இரும மொழிக்கு (binary/machine language) மாற்ற ஒரு மொழிமாற்றி (compiler) தேவைப்படுகிறது. அதை எப்படிப் பெறுவது? என்ன விலை இருக்கும்?


  javac என்பதுதான் ஜாவாவை மொழிமாற்றும் (கம்பைல் செய்யும்) நிரல்.  இந்த பயன்பாடு ஜே.டி.கே (JDK- Java Development Kit) என்னும் மென்பொருள் தொகுப்புடன் வருகிறது.  நீங்கள் ஜாவாவில் புரோகிராம் செய்ய ஜே.டி.கே மிகமிக அவசியம்.  ஜே.டி.கே இணையத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.  அல்லது டிஜிட்,பிசிகுவெஸ்ட்.. போன்ற ஆங்கில கணினி மாத இதழ்களுடன் வரும் குறுவட்டிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.


ஜே.டி.கே தொகுப்பில் ஜே.ஆர்.இ (JRE- Java Runtime Engine) என்கிற துணை தொகுப்பு இருக்கிறது.  ஜாவா நிரலை இயக்குவதற்கு ஜே.ஆர்.இ அவசியமானது.  ஜே.ஆர்.இ நிறுவப்படாத கணினியில் ஜாவா நிரலை இயக்குவதற்கான கட்டளையான java என்பதை விண்டோஸ் கமாண்ட் ப்ராம்ப்டிலோ, லினக்ஸ் டெர்மினலிலோ கொடுத்தால் java: command not found, java not installed போன்ற பிழை செய்தி தோன்றும்.  இந்த பிழைசெய்தி உங்கள் கணினியில் தோன்றினால் ஜாவா நிரல்களை இயக்கக் கூடிய ஜே.ஆர்.இ தொகுப்பு உங்கள் கணினியில் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


ஜே.டி.கே இல்லாவிட்டாலும் ஜாவா நிரலை இயக்க முடியும், ஆனால்  ஜே.ஆர்.இ இல்லாமல் முடியாது.

என்னய்யா கொஞ்ச நேரம் முன்புவரை ஜே.டி.கே அவசியமென்று சொல்லிவிட்டு, இப்போது தேவையில்லைன்னு சொன்னா மண்டை காயாதா எனக் கேட்கிறீர்களா. 

சற்று உற்று கவணிக்கவும்.  ஜே.டி.கே இல்லையென்றால் நாம் எழுதிய நிரல்களை மொழிமாற்றம்/ கம்பைல் (ஜாவாவிலிருந்து பைட் நிரலிற்கு) செய்ய இயலாது.  ஜே.ஆர்.இ இல்லையென்றால் பிறர் உருவாக்கி வைத்திருக்கும் (ஏற்கனவே மொழிமாற்றி வைத்திருக்கும்) கோப்புகளையும் இயக்க இயலாது.  ஜே.ஆர்.இயை மட்டும் தனியாக நிறுவிக் கொள்ளலாம், அல்லது ஜே.ஆர்.இயையும் தன்னுள் அடக்கிய பெரிய தொகுப்பான ஜே.டி.கேவை நிறுவிக் கொள்ளலாம்.
  • ஜாவாவில் மென்பொருளை/நிரல்களை உருவாக்க ஜே.டி.கே தேவை.
  • ஜாவாவில் உருவாக்கிய மென்பொருளை/நிரலை இயக்க ஜே.ஆர்.இ தேவை.
java கட்டளை ஜாவா நிரலை இயக்க பயன்படுகிறது.  இது ஜே.ஆர்.இ யுடனே வந்துவிடும்.  ஜாவா நிரலை கம்பைல் செய்ய உதவும் javac கட்டளை ஜே.ஆர்.இயுடன் வராது.

javac கட்டளையை இயக்க ஜே.டி.கே நிறுவப்பட்டிருக்க வேண்டும்.  ஜே.டி.கே, ஜே.ஆர்.இ இவை இரண்டுமே அனைத்து இயக்க சூழல்களுக்கும் கிடைக்கின்றன. விண்டோசுக்கு .exe கோப்பாகவும், லினக்சுக்கு .rpm,.deb,.bin... கோப்பாகவும், மேக் இயங்குதளத்திற்கு .dmg கோப்பாகவும் கிடைக்கின்றது.

ஜே.வி.எம் (JVM- Java Virtual Machine) என்பதுதான் ஜாவாவை இயக்குகிற மைய மென்கலம்.  ஜாவாவை இயக்குவதற்கான் இதயம் போன்றது.  தமிழில் இதை ஜாவா மெய்நிகர் கணினி என்று அழைக்கலாம்.  இதன் பயன் என்ன? இதை எப்படி நிறுவது? எனப் பல கேள்விகள் எழலாம்.

ஜே.வி.எம்மை நீங்கள் தனியாக நிறுவ வேண்டியதில்லை.  ஜே.வி.எம் என்பது ஜே.ஆர்.இக்குள் அடக்கம். JDK<----JRE<------JVM.  நீங்கள் எழுதிய ஜாவா நிரலை ஜாவா மெய்நிகர் கணினிதான் இயக்குகிறது.  ஜாவா நிரல்கள் .java என்கிற கோப்பாக இருக்கும். 
javac மொழிமாற்றி அதனை .class கோப்பாக மாற்றித் தரும்.  ஒரு மொழிமாற்றியின் வேலை உயர்நிலை மொழியிலிருந்து இரும மொழிக்கு மாற்றுவதுதான் என ஏற்கனவே பார்த்தோம்.  இன்னொன்றையும் புரிந்து கொண்டால் இதை உள்வாங்கிக் கொள்ள எளிமையாய் இருக்கும்.  


இரும மொழி கோப்புகள் (binary files) எந்த நீட்டிப்பில் (extension) இருக்கும்?  விண்டோசில் .exe என்று இருக்கும்.  லினக்சில் .bin என்று இருக்கும்.  அதுசரி பின்னர் ஏன் .java கோப்பு .exe கோப்பாகவோ .bin கோப்பாகவோ இல்லாமல் .class என்கிற ஒரு புது நீட்டிப்புடன் உருவாகிறது.

இதன் பின்னனியில்தான் இருக்கிறது ஜாவாவின் அடிப்படைத் தத்துவம்.  நேரமின்மையால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பகிர்ந்து கொள்ள முடிகிறது.  அடுத்த பதிவில் எக்லிப்ஸ் மென்பொருளை எவ்வாறு பயன்படுத்தலாம் என விரிவான விளக்கங்களுடன் (படங்களுடன்)  அடுத்த பதிவில் பார்க்கலாம்.  அதுவரை எக்லிப்ஸ் குறித்து கீழ்காணும் பதிவில் மேலோட்டமாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.