எக்லிப்ஸ் ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல் ( IDE -Integrated Development Environment) எக்லிப்ஸ் நிறுவனத்தால் (eclipse organization)
பராமரிக்கப்பட்டும், மேம்படுத்தப்பட்டும் வருகின்றது. இது தனியார்
மென்பொருள் நிறுவனமல்ல. அப்பாச்சி சாப்ட்வேர் பவுண்டேஷன் போலவே உலகின்
முன்னனி நிறுவன மென்பொருளியலாளர்களையும் வேறு தனியார்/பொது
அமைப்புகளையும், அதிகளவில் தன்னார்வல மென்பொருள் வல்லுனர்களையும் கொண்ட
இலாப நோக்கமற்ற நிறுவனம்.
ஐ.பி.எம் (IBM - International Business Machines) கோடிக்கணக்கான பணத்தை எக்லிப்ஸ் மேம்பாட்டிற்காக செலவிட்டுள்ளது. ஐ.பி.எம் இதில் இவ்வளவு அக்கறை காட்ட காரணம் உலகின் அத்தனை ஜாவா நிரலர்களையும் தன்பக்கம் திருப்புவதற்காகவே.
எக்லிப்ஸின் புதிய பதிப்பு எக்லிப்ஸ் ஹீலியோஸ் (Eclipse Helios) . நெட்பீன்ஸின் புதிய பதிப்பு v6.9. உபுண்டு இயங்க தளத்திற்கு கருமிக் கோலா, லூசிட் லிங்க்ஸ் போன்று பெயர் வைப்பதைப் போல எக்லிப்சுக்கும் கேனி மேட் (Gany Mede), கலிலியோ (Galileo) , ஹீலியோஸ் (Helios)... என பெயர் வைத்திருக்கிறார்கள். நீங்கள் புதிதாக பதிவிறக்கம் செய்வதாயிருந்தால் உங்கள் இயங்குதள பெயருடன் சேர்த்து கூகிளில் தேடி பதிவிறக்கிக் கொள்ளவும். linux eclipse helios download, windows eclipse helios download...
எக்லிப்சை நிறுவதற்கே (installation) தேவையில்லை. எக்லிப்ஸ் சுருக்குக் கோப்பை (compressed file) விரித்தாலே போதுமானது. எக்லிப்சை முதல்முறை இயக்கிப் பார்ப்பதற்குமுன் உங்கள் கணினியில் ஜே.ஆர்.இ நிறுவப்பட்டிருக்கிறதா என உறுதிசெய்து கொள்ளவும். ஏனெனில் எக்லிப்ஸ் ஜாவாவில் உருவாக்கிய மென்பொருள். எந்தவொரு ஜாவா நிரலையும்/ மென்கலத்தையும் இயக்க ஜே.வி.எம் மிக மிக அவசியம். அந்த ஜே.வி.எம் ஜே.ஆர்.இ க்குள்தான் இருக்கிறது. மறந்துவிடாதீர்கள்.....
ஐ.பி.எம்முடைய வணிக மென்பொருள், எக்லிப்ஸ் இலவச மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட பதிப்பே ஆகும். MyEclipse ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழலும் எக்லிப்ஸுடன் கூடுதல் வசதிகளை சேர்த்த வணிக மென்பொருளாகும். மாணவர்களுக்கு மட்டுமில்லை வளர்ந்துவரும் சிறிய நிறுவனங்களுக்கும் இலவச திறமூல தீர்வுகளை பயன்படுத்துவதன் மூலம் செலவுகளைக் குறைக்க முடிகிறது. ஏற்கனவே நன்கு வளர்ந்துவிட்ட டி.சி.எஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களிலும் எக்லிப்ஸை பயன்படுத்தவே ஊக்குவிக்கிறார்கள். ஏனெனில் ஊருடன் ஒத்து வாழ் என்பது மென்பொருள் துறைக்கும் பொருந்தும்.
நெட்பீன்ஸ்
ஒருங்கிணைந்த உருவாக்க சூழலும் ஜாவா மென்பொருள் உருவாக்கத்திற்கான பிரபல
மென்பொருளாகும். இதில்லாமல் ஆரக்கிள் ஜேடெவலப்பர், ப்ளூஜே.. என பல
மென்பொருட்கள் இருக்கின்றன.
இதில் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால் ஆரக்கிள் தனக்கெனவும் ஒரு ஜாவா (jDeveloper) உருவாக்க மென்பொருள் வைத்திருக்கின்றது, தன்னுடைய போட்டியாளரான ஐ.பி.எம்மின் ஆதரவுடன் இருக்கும் எக்லிப்ஸ் அமைப்பிலும் கவுரவ உறுப்பினராக இருக்கிறது. அதோடில்லாமல் சன் மைக்ரோசிஸ்டம்ஸை கையகப்படுத்தியன் மூலம் சன் மைக்ரோ சிஸ்டம்ஸின் திறமுல ஜாவா மென்பொருளான நெட்பீன்ஸையும் சொந்தமாக்கிக் கொண்டது. போட்டி அதிகரிக்க அதிகரிக்க, ஆளாளுக்கு முந்திக் கொண்டு புது வசதிகளை அறிமுகப் படுத்துவார்கள். மென்பொருள் நிரலராக அகமகிழ்ந்து கொண்டு காலத்தை ஓட்டி விடலாம்.
ஜாவா நிரலை புதிதாக கற்ப
நினைப்பவர்கள் ஏதேனும் ஒரு உருவாக்கச் சூழலிலேயே கற்றுக் கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறேன். சென்ற பதிவின் பின்னூட்டத்தில் (comments)
திரு.மணிகண்டன் அவர்கள் இது குறித்து ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கான
பதிலையும் பின்னூட்டத்தைப் படித்து தெரிந்து கொள்ளவும்.
ஒ.உ.சூ என்று சுருக்கமாகச் சொன்னால் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. எனவே ஐ.டி.இ எனவே இனி குறிக்கிறேன். :-) ஹி ஹி.........
எக்லிப்ஸ் மென்பொருள் பார்ப்பதற்கு இப்படித்தான் இருக்கும்.
எக்லிப்சில் ஜாவா நிரல் எழுத முதலில் ஜாவா திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
File--->New---->Java Project
பிறகு ஜாவா வகை (.class) உருவாக்க
வேண்டும். நாம் எழுத வேண்டிய நிரல் கட்டளைகளை இந்த கோப்பில்தான்
எழுதுவோம். எடுத்துகாட்டிற்கு Factorial.java கோப்பை உருவாக்க முதலில்
எக்லிப்ஸ் ஜாவா திட்டத்தை (Java project) உருவாக்கிக் கொள்ளுங்கள். பின்
நீங்கள் உருவாக்கிய திட்டத்தில் வலது கிளிக் செய்து புது ஜாவா class கோப்பை
உருவாக்குங்கள்.
கீழ் காண்பிக்கப் பட்டுள்ளதுபோல் ஒரு திரை தோ ன்றும். அதில் Factorial (எ.கா) என தட்டச்சு செய்யவும். கவனிக்க Factorial.java இல்லை வெறும் Factorialதான். public static void main என்பதை தேர்வு செய்யவும்.
இன்றும் பலர் ஜாவாவில் முதல் வரியிலேயே தவறு செய்வதுண்டு. ஏனெனில் ஜாவா case sensitive மொழி. String என்று எழுதுவதற்கு பதில் string என எழுதுவது. system, Public, Void.. போன்று பல தவறுகளை செய்வோம்.
சிந்தனைக்கு: தவறே செய்யாத மனிதன் புதியது எதையும் செய்திருக்க மாட்டான்.
சிந்தனைக்கு: தவறே செய்யாத மனிதன் புதியது எதையும் செய்திருக்க மாட்டான்.
நாம் தட்டச்சிடும் நிரல் ஒழுங்கில்லாம்மல் ஏட்டில் எழுதுவதுபோன்றே ஏழு
கோணத்தில் இருந்தால், எக்லிப்ஸ் நொடியில் அதை சீராக்கித் தந்துவிடும்.
ஜாவாவில் நிரல் கட்டளைகளை பகிர்வதற்கு முன் எக்லிப்சுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறேன். பல ஐ.டி.இ க்கள் வலம் வந்தாலும் எக்லிப்ஸ் முடிசூடா மன்னனாக இருப்பதற்கு அது ஒரு இலவச மென்பொருள் என்பதால் மட்டுமல்ல, அந்தளவிற்கு நிரலாக்கத்தை எளிமை படுத்தி விடுகிறது. நோட்பேட் போன்ற டெக்ஸ்ட் எடிட்டரில் எழுதும்போது பிழைகள் உடனே தெரியாது.
நாம் எழுதிய நிரலை கம்பைல் (மொழி மாற்றம்) செய்யும் போதுதான் ஒரு சாதாரண நிரலிலேயே நூற்றுக்கணக்கான பிழைகள் இருப்பது தெரியவரும். அப்படியில்லாமல் ஒரு வரியை எழுதும்போதே அதிலிருக்கும் பிழைகளை சுட்டினால் எப்படி இருக்கும்?!..
எக்லிப்ஸ் இன்னும் ஒரு படி மேலே போய், பிழைகளை மட்டும் சொல்வதோடு மட்டுமல்லாமல் அதை களைவதற்கான உதவியையும் தருகிறது.
நிரல் இயங்கிபின் வெளியீடையும் (output) இருந்த இடத்திலேயே விரைவாக காண முடியும்.
எனவே ஜாவா மட்டுமல்ல எந்தவொரு கணினி
மொழியைக் கற்றுக்கொள்ள நினைப்பவர்களும் நிச்சயமாக கற்றலை எளிமை படுத்தும்,
இனிமை படுத்தும் மென்பொருட்களை முதலில் பயன்படுத்த வேண்டும். ஆசிரியர்
பயன்படுத்தவில்லை என்றால் அவர்கள் காலத்தில் இவ்வளவு எளிமையான ஆற்றல்
மிகுந்த மென்பொருட்கள் இல்லை. தற்போதைய நம் தலைமுறை இருக்கும் ஆற்றல்
வாய்ந்த மென்பொருட்களைக் கொண்டு ஆற்றல்மிக்க மென்கலங்களை உருவாக்கிடல்
வேண்டும்.
அந்தவகையில் ஐ.டி.இ க்கள் உங்கள் அறிவை மழுங்கடிப்பதற்காக இல்லை, உங்கள் நிரலறிவை மேலும் செறிவூட்டுவதற்காகவே....
அடுத்த
பதிவிலிருந்து நிரலெழுத தொடங்குவதற்குமுன், முதல் வேலையாக ஏதேனும் ஒரு
ஜாவா ஐ.டி.இ க்கு உங்கள் கணினியில் கொஞ்சம் இடம் கொடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.