என்னுடைய ஆங்கில வலைப்பக்கத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும் இப்படிக்கு உங்கள் தோழன் ஷாஜஹான் சார்லஸ்

2/25/2013

ஜாவா புரோகிராமிங் -- புதிய தொடர்

ஜாவா மொழியை எளிதாய் கற்றுக் கொள்ள நினைப்பவர்களுக்காக இந்த தொடர் கட்டுரை.


தொழில்நுட்பத் தகவல்களை தமிழில் படித்தறிவது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.  புதுப் புது பதிவுகளும், புதிய சிந்தனைகளும் தமிழ்வழி கற்றலின் மூலம் அறிவை மேலும் மெருகேற்றும்.  இதற்கு இணையம் முதுகெலும்பாக செயல்படும்.  ஆங்கிலத்தில் படித்தால்தான் வேலை கிடைக்கும் எனப் பல மாயையைகளும் நிலவுகிறது.  


இன்று மென்பொருள் நிறுவனத்தில் பல சாதனைகள் நிகழ்த்தும் அனைத்து பொறியாளர்களும் ஆங்கிலத்திலேயே பிறந்து ஆங்கிலத்திலேயே ஊறியவர்கள் அல்ல.  ஏழை நடுத்தர குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பால் சிகரங்களைத் தொட்டவர்கள் ஏராளம்.  எதில் படித்தாலும் புரிந்து கொண்டு படித்தால்தான் நமக்கும் பிறருக்கும் பயன்படும்.


இவையில்லாமல் தேர்வில் எடுக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், வாங்கிக் குவிக்கும் சான்றிதழ் படிப்புகளும் வேலைக்காகாது என்பது கசப்பான உண்மை.  நிறுவனங்களும் அனைத்து திறமை உள்ளவர்களைதான் எதிர்பார்க்கிறது என்றாலும், நல்ல அடிப்படை அறிவும் புதியவற்றைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இருந்தாலே புதியவர்களுக்கு பயிற்சியளித்து தங்களுக்குத் தேவையான வளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன.


பொதுவாக இன்றைய நிலையில் ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான் கணினியைக் கையாளுகின்றனர்.   இணையத்தில் தமிழில் கட்டுரைகளைப் படிப்பவர்களும் ஆங்கிலம் அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள்.   கணினி செயல்பாடு,  புதிய தொழில்நுட்ப தகவல்கள் சார்ந்த கட்டுரைகள் எனத் தமிழில் படித்தாலும் கணினி மொழி நுட்பம், மென்பொருள் உருவாக்க நுணுக்கங்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில்தான் கற்றுக் கொண்டிருக்கிறோம்.



இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள்தான் இருக்கும்,


  1. ஆங்கிலத்திலேயே அருமையான உதவிகள் கிடைக்கப்பெருகின்றது, பின்னர் பிறமொழியில் படிக்க அவசியமென்ன என்ற மனோபாவம்.

  1. மற்றொன்று அவற்றைத தமிழில் தேடினாலும் கிடைப்பதில்லை.

எடுத்துகாட்டிற்கு ஜாவா நிரலாக்கம், ஜாவா புரோகிராம், tamil java, tamil javascript... என்று எப்படி மாறி மாறித் தேடினாலும் தேடுவது கிடைப்பதில்லை.  தமிழில் கணினி தொழில்நுட்பம் குறித்து நிறைய நூல்கள் உள்ளது.   இருப்பினும் நம் மணம் முதலில் தேடுவது இலவசங்களைத்தான்.  அனைத்து புத்தகங்களையும் வாங்கிப் படிப்பதற்கு எங்கே வசதி இருக்கிறது.


இளங்கலை முதலாம் ஆண்டுவரை மக்கு ப்ளாஸ்த்திரியாகவே வாழ்ந்து வந்தவனுக்கு இன்று மென்பொருள் உருவாக்கத்தில் காதலை ஏற்படுத்தியது தமிழ் கம்ப்யூட்டரும், கம்ப்யூட்டர் உலகம் மாத இதழும்தான்.  இவற்றில் அடிப்படைகளை தமிழில் கற்றுக் கொண்ட பிறகுதான் ஆங்கில இதழ்களையும் கொஞ்சம் சீண்டினால் என்ன என எண்ணத் தோன்றியது.   அவற்றை மாதம் நூறு ரூபாய்க் கொடுத்து வாங்க வசதியில்லாததால் நூலகத்தை பயன்படுத்தவும் கற்றுக் கொண்டேன். 


கொஞ்சம் கொஞ்சமாக நான் புரிந்து கொண்டதை மாணவர்களுக்காகவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்காகவும்  தாய் மொழியிலேயே பகிர்ந்து கொள்கிறேன்.  


      ஜாவா நிரலாக்கம் குறித்து புத்தம் புதிய தொடர் எழுத முடிவெடுத்துள்ளேன்.  இம்முயற்சி இன்னும் பலரை எழுதத் தூண்ட வேண்டுமென்பது என் அவா.   இம்முயற்சி வெற்றிபெற நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டுகிறேன்.


முதலில் ஏன் ஜாவாவைத் தேர்ந்தெடுத்தேன்?

 -------------------------------------------------------        

  

கணினி உலகில் மென்பொருள் உருவாக்கத்திற்கு ஏகப்பட்ட  நிரல் மொழிகள் உள்ளன.   இவை அனைத்தையும் கற்றுக் கொள்வது சாத்தியமல்ல,  அதற்கு அவசியமும் இல்லை.   எவ்வளவு மொழிகள் வந்தாலும் இன்றளவும் சி மொழி நிலைத்து நிற்கின்றது.  


காரணம் அம்மொழியைக் கொண்டு நம் கணினியுடன் பேசலாம், விளையாடலாம்.  System programmingற்கு இதை அடித்து கொள்ள இன்னொரு மொழி பிறக்க வேண்டும்.  


இன்னும் எத்தனையாயிரம் மொழிகள் வந்தாலும் அடிப்படை மொழிக் கூறுகள் பெரும்பாலும் இம்மொழியைச் சார்ந்தே இருக்கும்.  ஒரு மொழியில் if, while, for, main()... எனப் படித்துவிட்டு முற்றிலும் புதிதான நிரல் தொடர்களைக் கற்பது கடினம்.   எழுதப்படாத இச்சட்டங்களை மீறி  முற்றிலும் புதியாதாக உருவாக்கும் எந்த நிரல் மொழியும் வெற்றியடையாது.  இருப்பினும் சி மொழி உருவான காலகட்டம் வேறு, தற்போது உள்ள அதி நவீன வசதிகளை மேலும் மேலும் எதிர்பார்க்கும் காலகட்டம் முற்றிலும் வேறு.  இன்று இருக்கும் சிக்காலான அமைப்புகளை அன்று 1970..(எழுபதுகளில்) கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.